மறுமலர்ச்சி ஆணி அடிப்போமா?

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே,

உங்களுக்கு என் நவம்பர் மாத அன்பின் வாழ்த்துக்கள்.

நவம்பர் மாதம் என்றாலே எல்லோர்க்கும் நினைவுக்கு வருவது வருட முடிவு. பெரும்பாலான திருச்சபை காரியதரிசிகளும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கான, ஆயத்த வேலைகளை இந்த மாதத்தில் முடுக்கி விடுவர். காரணம் என்ன? வருட முடிவு.

ஆனால் இந்த நவம்பர் மாதம் திருச்சபை மறுமலர்ச்சி, சீர்திருத்தம் ஆகியவற்றின் முதல் நாள் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?. திருச்சபை வரலாற்றில் அக்டோபர் மாத கடைசி நாள் மற்றும் நவம்பர் மாத முதல் நாள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாட்கள். காரணம் என்ன? ரோமன் கதோலிக திருச்சபையின் பிரதான குருவின் போதனைகள் முக்கியம் அல்ல, அவரின் எழுத்துக்கள் ரட்சிப்பு அல்ல, அவரின் வழிநடத்துதல் ஆண்டவரின் ராஜ்யத்தின் வழிகள் அல்ல, என்று மார்ட்டின் லூதர் கூக்குரல் இட்ட நாள் அக்டோபர் 31,1517. எவ்வாறாக நமது ஆண்டவராகியே இயேசு கிறிஸ்து ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பரிசேயர், சதுசேயர் என்பவர்களுக்கு எதிராக அறைகூவல் விடுத்தாரோ அதேபோன்று லூதர் விடுத்த அறைகூவல் அது. அந்த அறைகூவல் பற்றி எரிய தொடங்கிய நாள் நவம்பர் 1.

அக்டோபர் 31 தேதி, மார்ட்டின் லூதர் ஆண்டவரின் வசனத்தின் படி தான் எழுதிய 95 ஆய்வுஅறிக்கைகளை தன்னுடைய திருச்சபையின் வாசல்களில் ஆணி கொண்டு அறைந்தார். நவம்பர் 1, அனைத்து புனிதர்களின் நாள் நிமித்தம் திருச்சபைக்கு வந்திருந்தோர் கண்களில் அது பட்டது, தீயாய் பரவியது. ஆண்டவரின் கைகளிலும், கால்களிலும் அறையப்பட்ட ஆணிகள் எவ்வாறாக மனுக்குல வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டுவந்ததோ அதேபோன்று திருச்சபை வாசல்களில் அறையப்பட்ட ஆணிகள் திருச்சபை வாழ்வில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியது.

லூதர் அறைந்த ஆய்வுஅறிக்கைகளின் சாராம்சம் என்ன?

  • ஆண்டவர் மட்டுமே நமக்கு வழிகாட்டி (Christ alone),
  • அவர்மேல் நாம் வைக்கும் விசுவாசம் மட்டுமே நம்மை அவரிடம் அழைத்து செல்லும் (Faith alone),
  • அவர் நம்மேல் வைத்த கிருபையால் மட்டுமே நாம் ரட்சிப்பை சுதந்தரித்து கொள்ளுகின்றோம் (Grace alone),
  • அவரின் வார்த்தையால் மட்டுமே நாம் பிழைக்கின்றோம் (Scripture alone)
  • ஆகவே அவருக்கு மட்டுமே புகழும் மாட்சிமையும் செலுத்துவோம் (Glory to God alone).

ஏனென்றால் கத்தோலிக்க திருச்சபை பணம், பதவி, பொருள் ஆகிவற்றை கொண்டு பாவ மன்னிப்பு மற்றும் ரட்சிப்பு பெற முடியும் என்று நம்பியது. அதின் குரு அவ்வாறாக போதித்தார், வழிநடத்தினார். கத்தோலிக்க திருச்சபை ஆண்டவரை விட்டும் அவரின் வார்த்தையை விட்டும் வெகு தூரம் சென்று இருந்தது.

எனவே இந்த நாளில் எனக்கு அன்பான திருச்சபையே,

  • லூதர் கூறிய இந்த ஐந்து காரியங்களும் உனக்குள் இருக்கின்றதா என்று, நீ இன்று சிந்தித்துப்பார்.
  • நீ தனிநபர் புகழ் படுகின்றாயா, ஆண்டவர் புகழ் பாடுகின்றாயா?
  • உனக்கு ஆண்டவர் வழிகாட்டியா, போதகர் வழிகாட்டியா?
  • விசுவாசம் மற்றும் கிருபையா அல்லது பணம் மற்றும் பதவியா?
  • பரமனின் வேதாகமமா இல்லை பாழ்கடிப்புகளின் ஆகமமா?

யோசனை செய்!
இதில் ஏதாவது ஒன்றுக்கு உன் பதில் தவறாக இருக்குமாயின்,
உன் வாசல்களிலும் ஆணி அறையும் நேரம் வந்துவிட்டது.
நவம்பர் மாதம் முடிவல்ல ஆரம்பம்.